ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக வேட்பாளர் வெற்றி பெற அனைத்து வகையான ஆதரவையும் தர வேண்டியது எங்களின் கடமை. பாஜக தொண்டர்கள் பாஜக நிற்க வேண்டும் என்றால் கூட, நம்முடைய பலம் என்ன என்பது நமக்குத் தெரியும். 2 மற்றும் 3 பிரிவுகளாக வாக்குகள் பிரியும்போது என்ன நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். கூட்டணியில் நிறைய தலைவர்கள் என்னுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
நேரம், காலம் உள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். நிற்கக் கூடிய ஒரு வேட்பாளர் வெற்றி பெற அனைத்து விதமான அஸ்திரங்களையும் கொடுக்க வேண்டியது எங்களின் கடமை.
காங்கிரஸ் கட்சியில் பெரிய பிரச்சினை உள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் பேச்சுகளை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். அரசியல் காரணங்களுக்காக பாஜகவை அவர் குறை எனச் சொல்லலாம். ஆனால், அவருடைய கட்சியின் மாவட்டச் செயலாளர் முழுமையாக அவரின் பின்னால் நிற்பாரா என்பது சந்தேகமாக உள்ளது.
கூட்டணியில் ஒரு வேட்பாளர் நின்றால், அவர் கூட்டணியின் வேட்பாளர். அதிமுக பெரிய கட்சி. அவர்களிடம் வேட்பாளர்கள் உள்ளனர். நிற்கக் கூடிய வேட்பாளர், திமுக கூட்டணி வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈவெரா கடந்த ஜன.4-ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. இதையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலை தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 18-ம் தேதி அறிவித்தது. அதன்படி, பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது.இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக காங்கிரஸ் தேசிய தலைமை நேற்று (ஜன.23) அறிவித்தது. ஆனால் அதிமுக கூட்டணி சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.