அந்தமான் – நிகோபரில் பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு தியாகம் செய்த வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன.
நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட மாபெரும் தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போசின் பிறந்த தினமான ஜனவரி 23, பராக்கிரம தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்த தினம் டெல்லியில் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், இதில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்தமான் நிகோபார் தீவுகளில் பெயர் இல்லாத 21 தீவுகளுக்கு பெயர் சூட்டி வீரர்களை கவுரவித்துள்ளார்.
அளவில் மிகப்பெரிய தீவுக்கு முதல் பரம்வீர் சக்ரா விருதை பெற்றவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பெரிய பெயரிடப்படாத தீவுக்கு இரண்டாவது பரம் வீர் சக்ரா விருது பெற்றவரின் பெயரும் சூட்டப்பட்டது. விக்ரம் பத்ரா, ராமசாமி பரமேஸ்வரன், மனோஜ்குமார் பாண்டே ஆகியோரின் பெயர்கள் தீவுகளுக்கு வைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த அளவுள்ள தீவுகளுக்கு அடுத்தடுத்து பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. சோம்நாத் தீவு, மனோஜ் பாண்டே தீவு, சேத்ரபால் தீவு, சஞ்சய் தீவு உள்ளிட்ட பெயர்கள் சூட்டப்பட்டன. மேலும் இந்த நிகழ்வின் போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்படும் வகையிலான தேசிய நினைவகத்தின் மாதிரியையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.