அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மின்னல் வேகத்தில் தொடங்கி விட்டது.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட ஜன26- வரை விருப்ப மனு கொடுக்கலாம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் அ.தி.மு.க. போட்டியிடப் போவதாக அறிவித்து உள்ளது. இதையடுத்து பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ் ஆகியோரை அ.தி.மு.க. தலைவர்கள் சந்தித்து ஆதரவு கேட்டனர். இதில் பா.ஜனதாவை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளன. பா.ஜனதா தரப்பில் இருந்து இதுவரை உறுதியான தகவல் எதையும் சொல்லவில்லை.
அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வமும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். அதே நேரம் பா.ஜனதா போட்டியிட்டால் ஆதரவு கொடுக்க தயார் என்றும் அறிவித்துள்ளார். அ.தி.மு.க.வுக்குள் நிலவும் இந்த குழப்பத்தால் பா.ஜனதா போட்டியிட யோசிக்கிறது. இதற்காக தொகுதியின் கள நிலவரத்தையும் சர்வே செய்து தயாராக வைத்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும் தமிழக பா.ஜனதா தலைமை டெல்லி தலைமைக்கு தெரிவித்துள்ளது. டெல்லி மேலிடத்தில் இருந்து தகவலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதை பொறுத்து தங்கள் முடிவை தெரிவிப்பதாக பா.ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவின் திட்டத்தால் அதிருப்தி அடைந்துள்ள அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மின்னல் வேகத்தில் தொடங்கி விட்டது. தேனியில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “என் வழி தனி வழி” என்று குறிப்பிட்டு சின்னத்தை பற்றி கவலைப்படாமல் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபடுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று முதல் விருப்ப மனு பெறப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமை கழகத்தில் இன்று முதல் 26-ந்தேதி (வியாழக்கிழமை) வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.15 ஆயிரம் செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “நாங்கள் கூட்டணி தர்மத்துடன் பா.ஜனதா உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளிடமும் ஆதரவு கேட்டோம். பா.ஜனதா தேசிய கட்சி என்பதால் டெல்லியில் கேட்டு சொல்வதாக கூறி இருக்கிறார்கள். அவர்கள் முடிவு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் போட்டியிடுவது உறுதி. இதில் எந்த மாற்றமும் இல்லை. கூட்டணி கட்சியின் முடிவை கேட்பதற்காக காத்திருப்பதில் தவறு இல்லை. வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது என்றார்.