
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த 1950 ஜனவரி 26ம் தேதியை குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.
இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக பணியாற்றிய ராஜகோபாலாச்சாரி (1950, ஜனவரி 26ம் தேதி காலை 10:18 மணிக்கு) இந்தியாவை இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசாக அறிவித்த தினம் இன்று ஆகும்.இந்தியாவில் அரசியல்சாசனம் அமலுக்கு வந்த ஜனவரி 26ம் நாளான இன்று குடியரசு தினமாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
டெல்லி கடமை பாதையில் இன்று காலை 10:30 மணிக்கு நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை பறக்கவிடுகிறார். குடியரசுத் தலைவராக பதவியேற்றபிறகு, முதல்முறையாக அவர் குடியரசு தின விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர்.
மேலும், சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல்-சிசி பங்கேற்கிறார். இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவு ஏற்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், குடியரசு தின விழாவில், முதல் முறையாக எகிப்து அதிபர் ஒருவர் கலந்துகொள்கிறார்.
இந்த விழாவையொட்டி கோலாகல அணிவகுப்பு நடைபெறுகிறது. விஜய் சவுக் பகுதியிலிருந்து கடமைப் பாதை வழியாக செங்கோட்டை வரை இந்த அணிவகுப்பு நடைபெறும். ராணுவம், கடற்படை, விமானப் படையினர் அணிவகுப்பில் பங்கேற்பர். எகிப்தைச் சேர்ந்த 120 வீரர்கள் கொண்ட குழுவும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கிறது. இதேபோல, பாதுகாப்புப் படையினரின் சாகசங்களும் அரங்கேறுகின்றன.
தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்கள் சார்பிலும், 6 அமைச்சகங்கள் சார்பிலும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெறுகிறது.அனைவருக்கும் dhinsari.com சார்பில் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.