
.
தமிழ் கடவுள் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் பழனி மலை முருகன் மற்றும் மலைமீது உள்ள கோபுரங்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது மலர் தூவப்பட்டது. அலை அலையாக மக்கள் திரண்டுள்ளதால் அரோகரா முழக்கம் விண்ணை எட்டியது.
அரோகரா கோஷம் விண்ணை பிளக்க முருகனின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு திருப்புகழ், திருமுறைகள் ஒலிக்க, தமிழில் வேத மந்திரகள் முழங்க தங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பழனி மலைக் கோயில் ராஜகோபுரம் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.பல லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி நகரம் முழுவதும் குவிந்துள்ளதால் 300 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு 7 இடங்களில் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 இடங்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பழனியில் ட்ரோன் காமிராக்கள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதுதாராபுரம் சாலையில் மால்குடி மருத்துவமனை பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு, ஐ.பெரியசாமி, உள்ளிட்டோர் ஆகியோர் பங்கேற்றனர். விழா முடிந்த பின்னர் 11 மணிக்கு மேல் வழக்கம் போல் அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் மற்றும் கோவை மார்க்கமாக செல்லும் பஸ்கள் அனைத்தும் பைபாஸ் சாலை மார்க்கமாக தற்காலிக பஸ் நிலையத்திற்கு செல்லும் வகையில் போக்குரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து பழனி நகருக்குள் செல்வதற்கு இலவச அரசு டவுன் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனியில் இன்று நகரம் முழுவதும் இறைச்சிக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
குடமுழுக்கை காண ஏராளமான பக்தர்கள் வந்ததால் பழனி மலைக் கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவை எல்.இ.டி. திரை மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டது. அடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதை உட்பட 3 இடங்களில் எல்.இ.டி. திரை மூலம் குடமுழுக்கு நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பழனிக்கு செல்ல 30 சிறப்புபேருந்துகள் இயக்கப்பட்டது.