ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை சிலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 3 நாளில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை சின்னம் கோரியும், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் நடந்த பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கவும், தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள உத்தரவிடக் கோரி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.இந்நிலையில், பழனிசாமி முறையீடு வழக்கில், அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால மனு மீது பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், தயவு செய்து பதிலளிக்க காலதாமதம் செய்யாதீர்கள் என தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், அதிமுக வழக்கில் பழனிசாமி தரப்பின் எதிர்மனுதாரர்கள் 3 நாள்களில் பதில் அளிக்கவும், இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட ஏதுவாக இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அந்த இடைக்கால மனு மீது மட்டுமே தற்போது விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.