2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் ஆகும். காலை 11 மணி அளவில் பட்ஜெட் உரை தொடங்கும் என்றும், கடந்த 2 ஆண்டுகளைப் போலவே இந்தப் பட்ஜெட்டும் காகிதமில்லாமல் டிஜிட்டல் வடிவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆறுபேர் கொண்ட குழு இந்த பட்ஜெட்டைஉருவாக்கி உள்ளது. மத்திய நிதித் துறை செயலர் டிவி சோமநாதன் (தமிழ்நாட்சை சேர்ந்தவர்), பொருளாதார விவகார துறை செயலர் அஜய் சேத், முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை செயலர் துகின் கந்தா பாண்டே, வருவாய் துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா, நிதி சேவைகள் துறை செயலர் விவேக் ஜோஷி, தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் ஆகியோர் இந்தப் பட்ஜெட் உருவாக்கத்தில் பங்கு வகித்துள்ளனர்.பட்ஜெட் உரை முடிந்த பிறகு, பட்ஜெட் ஆவணம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இணையத்தில் பதிவேற்றப்படும். ‘Union Budget Mobile App’ என்ற செயலி மூலம் பட்ஜெட் ஆவணத்தை வாசிக்க முடியும்.