அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் பகல் 2 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த ஜன.24-ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, இந்த குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் இன்று அளித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை இரு அவைகளும் கூடியவுடன் அனைத்து நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துவிட்டு அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு குறித்து உடனடியாக விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இரு அவைகளின் தலைவர்களும் ஏற்க மறுத்ததை தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டதால், பகல் 2 மணிவரை அவைகள் ஒத்திவைக்கப்பட்டது.