விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் எலக்ட்ரிக் சாமான்கள் விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் ஏராளமான எலக்ட்ரிக் பொருள்கள் எரிந்து நாசமானது.
சிவகாசி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள காந்தி சாலையில் ரவி அருணாசலம் என்பவருக்கு சொந்தமான மின்சாதன பொருள்கள் விற்பனை கடை உள்ளது. இந்த கடை மூன்று தளங்கள் கொண்டதாகும்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றனர். தொடர்ந்து இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர், சாத்தூர் ஆகிய பகுதிகளின் தீயணைப்பு படையினர் 8 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதிக அறைகள் கொண்ட கட்டடம் என்பதால் தீயை அணைக்கும் பணி தாமதமானது என தீயணைப்படையினர் கூறினர். இந்தத் தீ விபத்தில் கடையிலிருந்த அனைத்து மின்சாதன பொருள்களும் தீயில் எரிந்து நாசமானது.
தீயில் எரிந்து போன பொருள்களின் மதிப்பு கணக்கிடப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். தீ விபத்து நடைபெற்ற இடத்தை தீயணைப்பு துறை தென் மண்டல துணை இயக்குனர் விஜயகுமார், மாவட்ட தீயணைப்பு அதிகாரி விவேகானந்தன், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பு சபரிநாதன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.