ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும்.
அதுவும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிட வேண்டும்.ஓபிஎஸ் வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் .பாஜக போட்டியிடாது என பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை மேலும் கூறியுள்ளதாவது,
ஒருபோதும் கூட்டணி கட்சி விவகாரங்களில் தடையிடுவதில்லை என்பது பாஜகவின் நிலைப்பாடாகும். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும். அதையே பாஜகவும் விரும்புகிறது. ஈரோடு இடைத்தேர்தலில் நிறுத்தப்படும் பொது வேட்பாளருக்கு முழு ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளோம். அதிமுக இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும்.
திமுகவுக்கு எதிராக அது கூடுதல் பலம் கொடுக்கும்.இடைத்தேர்தலில் அதிமுக இணைந்து செயல்பட வேண்டும் என ஓபிஎஸ்ஸிடம் தொலைப்பேசி வாயிலாக பேசினேன். அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நேரிலும் சென்று பேசினோம்.
எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளதால், அவருக்கு ஆதரவளிப்போம் என ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டுக்கொண்டேன்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக பிரிந்து இரு அணிகளாக இருந்தால், வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும்.
அதிமுக சார்பில் ஒரு வேட்பாளரை இரட்டை இலை சின்னத்தில் நிற்கவைத்தால், பாஜக முழுமையாக களப்பணி செய்து வெற்றிபெற உழைக்கத்தயாராக உள்ளது. எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதால், இன்று மாலைக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்
மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை திரும்பப் பெற வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
இது தொடர்பாகவும் தொலைபேசி வாயிலாக ஓ.பன்னீர்செல்வத்திடம் உரையாடினேன்.
ஓ.பன்னீர் செல்வம் வேட்பாளரை விட எடப்பாடி பழனிசாமி வேட்பாளருக்கு உள்ளூரில் அதிக செல்வாக்கு உள்ளது.
அதனால், ஓபிஎஸ் தனது வேட்பாளர் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். இபிஎஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். என்று கூறியுள்ளார்