இன்று துருக்கி, சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1300 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் இன்று மாலை மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவு ஏற்பட்டுள்ளதாக ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன.உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து துருக்கி, சிரியாவில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 100 பேர் கொண்ட 2 இந்திய குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லையில் உள்ள நகரங்களின் பல ஆயிரம் கட்டடங்கள் குலுங்கின. பல நூறு வீடுகள் முற்றிலும் இடிந்து சிதறி சேதமடைந்துள்ளன. 10 மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை சுமார் 3000 பேர் காயமடைந்துள்ளதாகவும் 1,700க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில் துருக்கியின் மத்திய பகுதியை மையமாகக் கொண்டு மீண்டும் இப்போது ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி மாலை 3.54 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள எல்பிஸ்தான் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கி மட்டுமின்றி சிரியாவில் டமாஸ்கஸ், லதாகியா உள்ளிட்ட பகுதிகளிலும் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்ச்சியில் இருந்தே அங்குள்ள பொதுமக்கள் இன்னும் மீளாத நிலையில், இப்போது இரண்டாவது சக்திவாய்ந்த நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனால் அங்கு உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. துருக்கியின் முக்கிய நகரங்களில் ஒன்றான இஸ்தான்புல் தொடங்கிப் பல நகரங்களில் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையிலான கட்டிடங்கள் இல்லை. இதன் காரணமாகவே அப்படியே அங்குள்ள கட்டிடங்கள் சரிந்துள்ளன. துருக்கி நாட்டில் மட்டும் 2800க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அப்படியே சரிந்துள்ளன.
இந்த இரண்டாவது நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. முதல் நிலநடுக்கத்திலேயே துருக்கி சிரியா நாட்டில் சுமார் 1200க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. மீட்புப் பணிகள் இப்போது தான் தொடங்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதில் காயமடைந்த பல ஆயிரம் பேருக்குச் சிகிச்சை அளிக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் துருக்கி மக்களுக்கு துணையாக 140 கோடி பேர் இருக்கின்றனர்.. உதவ இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் துருக்கி, சிரியாவில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 100 பேர் கொண்ட 2 இந்திய குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.