கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி கூட்டு ரோட்டில் இன்று கார் மீது அரசுப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியாகினர். இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.போலீசார் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்

இன்று அதிகாலை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மதிவாணன் (35), அவரது மனைவி கௌசல்யா (32). இவர்களது மகள் சாரா, கவுசல்யாவின் தந்தை துரை (60), கவுசல்யாவின் தாய் தவமணி (55) ஆகியோர் சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, முன்னால் சென்ற காரின் பின்புறம் மோதியது. கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது.
இதில் காரில் பயணம் செய்த மதிவாணன், கவுசல்யா, தவமணி, குழந்தை சாரா ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதியவர் துரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து வேப்பூர் தீயணைப்பு துறையினர் காரில் சிக்கிய உடல்களை ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.

இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரிக்கின்றனர். சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.