
வெளிப்படை தன்மையுடனே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கிருஷ்ணனுன்னி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. 2 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ்எஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதனை திமுக கூட்டணி கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக கூட்டணி தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் வரவில்லை.
இதனிடையே ஈரோட்டில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்க மறுத்ததால் போலீசாருடன் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த ஆட்சியர், வெளிப்படை தன்மையுடனே ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மைக்கில் அறிவிக்கப்படும்.
அடுத்தடுத்த சுற்றுகள் வாக்கு நிலவரம் விரைவில் வெளியாகும். குறிப்பிட்ட நேரத்திற்குள் தான் அறிவிக்க வேண்டும் என கட்டாயமில்லை. தேர்தல் ஆணைய உத்தரவு காரணமாக செய்தியாளர்களை வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கவில்லை என தெரிவித்தார்.