தோள் சீலை போராட்டம் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைவதை தொடர்ந்து தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
சனாதன சாதியப் பாகுபாட்டிற்கு எதிராக சமூகநீதிக்கு வித்திட்ட தோள் சீலைப் போராட்டம் என்ற அடைமொழியைக் கொடுத்து, அதனுடைய 200 ஆவது ஆண்டு விழாவை ஒரு சிறப்பான மாபெரும் பொதுக்கூட்டமாக இன்றையதினம் எழுச்சியுடன், ஏற்றத்துடன் ஏற்பாடு செய்திருக்கக்கூடிய ஒருங்கிணைப்புக் குழுவினர் அனைவருக்கும் என்னுடையது மனமார்ந்த பாராட்டுகளை, நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
எத்தகைய இழிநிலை இந்த நாட்டில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது? என்பதையும் – வீரமிக்க போராட்டத்தின் காரணமாக அந்த இழிநிலை அடித்து நொறுக்கப்பட்டது என்பதையும் – இன்றைய இளைய தலைமுறையினருக்கு உணர்த்துவதற்காகவே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
நடத்தப்பட வேண்டும். இன்றைக்கு கல்வியில், வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில், நாகரிகத்தில், தமிழ்நாடு எவ்வளவோ உயரங்களைத் தொட்டுவிட்டது. இப்படிப்பட்ட உயரத்தில்தான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தோமா என்றால், இல்லை.
இப்படிப்பட்ட உயரத்தில்தான் 100 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தோமா என்றால், இல்லை. ஒரு காலத்தில் அனைத்து உணவு விடுதிக்குள்ளும் அனைவரும் போக முடியாது. பஞ்சமர்களும் குஷ்டரோகிகளும் உள்ளே வரக்கூடாது என்று போர்டு மாட்டி இருப்பார்கள். நாடகக் கொட்டகைகளுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
ரயில் நிலையங்களில் உயர்சாதியினர் சாப்பிடத் தனி இடம் இருந்தது. ரயில் விட்டபோது ஒவ்வொரு வர்ணத்துக்கும் தனித்தனியாக பெட்டிகள் ஒதுக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்தார்கள். 80 வயதைக் கடந்த பெரியவர்களிடம் நீங்கள் கேட்டுப் பாருங்கள்.
அவர்களுக்குத்தான் தமிழ்ச் சமுதாயத்தில் இந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் நடந்திருக்கக்கூடிய மாற்றங்கள் தெரியும். எப்படி இருந்த நாம் – இப்போது இப்படி உயர்ந்திருக்கிறோம் என்பது தெரியும். அப்படிப்பட்ட கால மாற்றத்தை உணர்த்துகின்ற விழாவாக இந்த தோள் சீலைப் போராட்டத்தின் 200-ஆவது ஆண்டு விழா அமைந்திருக்கிறது.
இக்கூட்டத்தில் 2 மாநில முதல்வர்கள் பங்கேற்றதால், நாகர்கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பெண்கள் தோள் சீலை அணியும் உரிமை கடந்த 1822-ம் ஆண்டு தொடங்கிய தோள் சீலை போராட்டம் வாயிலாக கிடைத்தது. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் அய்யா வைகுண்டரும், கேரளாவில் நாராயண குருவும், சீர்திருத்த கிறிஸ்தவ சமய தொண்டராக விளங்கிய சார்லஸ் மீட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ், விஜய் வசந்த் எம்.பி. பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.