செங்கோட்டை ரயில் நிலையத்தில் நடைமேடை எண்ணிக்கையை 5 ஆக உயர்த்த வேண்டும்; முன்னர் ஒதுக்கப்பட்ட படி இரண்டு லிஃப்ட்கள் வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் முன்வைத்தனர்.
செவ்வாய்கிழமை நேற்று (மார்ச் 7) காலை செங்கோட்டை ரயில் நிலையத்துக்கு ரயில்வே அமைச்சகத்தின் பயணிகள் வசதிகள் குழுவினர் ( PAC Passengers Amenities Committee) ஆய்விற்காக மதுரை கோட்ட அதிகாரிகளுடன் வந்திருந்தனர். இந்தக் குழுவில் ரவிச்சந்திரன், மதுசூதன், கோட்டாலா உமா ராணி , அபிஜித் தாஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்தக் குழுவினரை செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க பொதுமக்கள் மற்றும் ஊடக தொடர்பாளர் ராமன், பொருளாளர் சுந்தரம், சிறப்புக் குழுத் தலைவர் குளத்து முரளி ஆகியோர் வரவேற்று இனிப்புகளை வழங்கி கோரிக்கை மனுவை அளித்தனர்.
செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க பொருளாளராகவும் செங்கோட்டை நகர பாஜக., வர்த்தக அணி தலைவராகவும் உள்ள S.சுந்தரம் வேண்டுகோளுக்கு இணங்கி செங்கோட்டை நகர பாஜக., பார்வையாளர் சீனிவாசன், நகர தலைவர் வேம்புராஜ், நகர பொது செயலாளர் பாலகிருஷ்ணன், நகர துணைத் தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டுத் தலைவர் செண்பகராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு ரயில்வே அமைச்சகத்தின் பயணிகள் வசதிகள் குழுவினருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர்.
செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பயணிகள் வசதிகள் குழுவினரிடம் கேட்டுக் கொண்டு, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரினர். அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள்…
1) செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு 2018ம் ஆண்டு சாங்ஷன் செய்யப்பட்ட இரண்டு லிப்டுகளை உடனடியாக நிறுவ நடவடிக்கை வேண்டும்.
2) செங்கோட்டை ரயில் நிலையத்தில் நடைமேடைகளில் போடப்பட்டிருக்கும் வழுவழு கிரானைட் தளத்தை கரடு முரடான தளமாக மாற்ற வேண்டும். மழைக்காலங்களில் பயணிகள் கிரானைட் தளத்தில் வழுக்கி விழ நேரிடுகிறது.
3)செங்கோட்டை ரயில் நிலயை கணினி பயணச்சீட்டு முன்பதிவு மையம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க வேண்டும்.
4)செங்கோட்டை ரயில் நிலையத்தில் தற்போது நான்கு நடைமேடைகள் உள்ளன.இவை ஐந்தாக உயர்த்தப்பட வேண்டும்.
5) கோவில்பட்டி தென்காசியில் உள்ளது போல பயணிகளுக்கு இரண்டாம் வகுப்பு ஓய்வறை செங்கோட்டையில் கட்ட வேண்டும்.
6) செங்கோட்டையில் பிட்லைன் வசதி செய்து தர ஆவன செய்ய வேண்டும்.
மேலும்,
7) ரயில்கள் குறித்த கோரிக்கைகள் –
i) சில வருடங்களுக்கு முன் சில மாதங்களே ஓடி, பிறகு நிறுத்தப்பட்ட செங்கோட்டை – தாம்பரம் அந்த்யோதயா ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.
ii) ரயில்வே கால அட்டவணை கமிட்டி பரிந்துரைத்தபடி விரைவில் குருவாயூர் புனலூர் ரயிலை செங்கோட்டை தென்காசி ராஜபாளையம் விருதுநகர் வழியாக மதுரைக்கு நீட்டிக்க வேண்டும்.
iii) வாரம் மும்முறை சென்னை செங்கோட்டை இடையே இயங்கும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரியாக்க வேண்டும்.
iv) நெல்லை – எர்ணாகுளம் – நெல்லை பாலருவி ரயில்களில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டியும் ஒரு மூன்றாம் ஏசி பெட்டியும் இணைக்க வேண்டும்.
v) மயிலாடுதுறை – செங்கோட்டை – மயிலாடுதுறை தினசரி முன்பதிவில்லா ரயில்களின் பெட்டிகளை அதிகரிக்க வேண்டும்.மேலும் இந்த ரயில்களில் முன்பதிவு வசதியுடன் கூடிய இரண்டு இரண்டாம் வகுப்பு செயர் கார்கள் இணைக்கப்பட வேண்டும்.
vi) செங்கோட்டை சென்னை பொதிகை அதிவிரைவு ரயிலுக்கு மாம்பலம் நிலையத்தில் நிறுத்தம் வழங்கிட வேண்டும்.
vii) தென்காசி வழியே இயக்கப்படுகிற நெல்லை – மேட்டுப்பாளையம் , நெல்லை – தாம்பரம் வாராந்திர ரயில்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும்.
viii) சபரிமலை சீசனில் விருதுநகர் ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை புனலூர் வழியாக இயங்கிய தாம்பரம் – எர்ணாகுளம் சிறப்பு விரைவு ரயில் கோடைகால சிறப்பு ரயிலாக இயங்க வேண்டும்… – ஆகியவற்றை முன்வைத்தனர்.
முக்கியமான கோரிக்கைகளாக,
1) செங்கோட்டை ரயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் மேடைகளின் முழு நீளத்துக்கும் மேற்கூரை வேயப்பட வேண்டும்.
2) செங்கோட்டை ரயில் நிலையத்தில் 2,3,4ம் நடைமேடைகளிலும் கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும்.
3) நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் செங்கோட்டை ரயில் நிலைய முதல் நடைமேடையில் கட்டி கொடுத்துள்ள இலவச கழிப்பறையை விரைவில் இயக்க ஆவன செய்ய வேண்டும்.
4) செங்கோட்டை ரயில் நிலையத்தில் மூன்றாம் நடைமேடை நான்காம் நடைமேடை இவற்றின் இடையே டிராலி பாதை அமைத்து தந்திட வேண்டும்… என்று குறிப்பிட்டனர்.
செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தொடர்பாளர் ராமன் இது குறித்துக் கூறியபோது, இன்று ஆய்வுக்கு வந்த பயணிகள் வசதிகள் குழுவினர் செங்கோட்டை ரயில் நிலைய முதல் நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ள மின் விசிறிகளின் நேர் கீழே பயணிகள் அமரும் இருக்கைகள் இல்லாமல் சற்று தள்ளி போடப்பட்டிருந்ததை கண்டு மின்விசிறிகளின் அடியில் இருக்கைகளை மாற்றி அமைக்க ஆணையிட்டனர்.
பயணிகளுக்கு குழாய் மூலமாக நடைமேடைகளில் வழங்கப்படும் குடிநீர் திருப்திகரமாக இல்லை என தெரிவித்தனர்… என்றார்.