
அதானி விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் வழங்கிய நிலையில் சபாநாயகர் மறுப்பு தெரிவித்தால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர் . இதனால் மக்களவை பிற்பகல் 2 வரை ஒத்திவைப்பட்டது.
அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்றும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த ஜன.24-ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் பாதியிலேயே விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலமுறை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்திருந்தனர்.
ஆனால், நாடாளுமன்றத்தில் விவாதிக்க அவைத் தலைவர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில், பட்ஜெட் தொடரின் இரண்டாவது பாதி நேற்று தொடங்கிய நிலையில் மீண்டும் எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தை அவைகளில் எழுப்பியதால் நாள் முழுவதும் அவைகள் முடங்கியது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக அதானி விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு நியமிப்பது குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், பிஆர்எஸ் எம்.பி. கேஷவ் ராவ் மக்களவையிலும், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி உள்ளிட்டோர் மாநிலங்களவையிலும் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
அதேபோல், அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்துவது குறித்து விவாதிக்க கோரி மாநிலங்களவையில் ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் நோட்டீஸ் அளித்துள்ளார்.
இந்த நிலையில் மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கிய நிலையில், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், அதானி விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் மக்களவையில் அளித்த நிலையில், அதை ஏற்க அவைத் தலைவர் ஓம் பிர்லா மறுத்துவிட்டார்.
இதனால் மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை அவை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா தெரிவித்தார்.