
கொல்லங்கோடு தூக்கத்திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை இரவு தொடங்கியது இந்த திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. 19-ந்தேதி தூக்கநேர்ச்சை குலுக்கல் மற்றும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குழந்தை பாக்கியம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் தூக்கத்திருவிழா நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு தூக்க திருவிழா வியாழக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது 10 நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு மூலக்கோவிலில் இருந்து வெங்கஞ்சி கோவிலுக்கு கொடிமரம் கொண்டுவரப்பட்டு. மாலை 3 மணிக்கு மூலக்கோவிலில் இருந்து அம்மன் திருவிழா நடைபெறும் வெங்கஞ்சி கோவிலுக்கு மேளதாளங்களுடன் எழுந்தருளல் நிகழ்ந்தது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி ஐதீக முறைப்படி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பின்னர் தூக்க திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவில் தலைவர் ராமசந்திரன் நாயர் தலைமையில் மதுரை ஆதீனம் ஹரிஹர சம்மந்த தேசிக பரமாச்சாரிய திருவடிகள் ஆன்மிக உரையாற்றினார்.

கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த், நெல்லை தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், கிள்ளியூர் எம்.எல். ஏ. ராஜேஷ்குமார், கொல்லங்கோடு நகராட்சி தலைவர் ராணி ஆகியோர் வாழ்த்தி பேசுகினார்கள். தொடர்ந்து விழா நாட்களில் தினமும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், உஷ பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
23-ந் தேதி காலை 7.30 மணி முதல் தூக்கக்காரர்களின் உருள் நமஸ்காரம் நடக்கிறது. 24-ந் தேதி மாலையில் வண்டியோட்டம் எனப்படும் தூக்கத்தேர் முன்னோட்டம் நடக்கிறது. 25-ந்தேதி சனிக்கிழமை அதிகாலையில் தூக்கக்காரர்களின் முட்டுகுத்தி நமஸ்காரம், அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளுதல் நடக்கிறது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றும் நிகழ்ச்சி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.