
பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 24 வரை வெளியிட வேண்டாம்- என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.தேர்தல் நடைமுறைகள் தொடரலாம். 22-ந்தேதி முழுநாள் விசாரணையை நடத்தலாம், 26-ந்தேதி தானே தேர்தல் என நீதிபதி இன்று வழக்கு விசாரணை யின் போது கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தனித்தனியாக அவசர வழக்குகளை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை உடனே விசாரணைக்கு எடுக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் அவர்கள் சார்பில் வக்கீல்கள் முறையிட்டனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி, இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு விசாரிக்க அனுமதி வழங்கினார். அதன்படி, இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் பெற்று மாலை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை அறிவித்து விட்டு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என ஓ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் வாதங்களை முன்வைத்தார். அவர் கூறியதாவது:- பொதுச்செயலாளர் தேர்தல் 1.50 கோடி உறுப்பினர்கள் மூலமே நடத்தப்படுகிறது. ஓபிஎஸ்-க்கு 1.50 கோடி உறுப்பினர்களில் 1 சதவீதம் கூட ஆதரவில்லை. வழக்கு தொடர்ந்த மூவருக்கும் இந்த வழக்கு தொடர அடிப்படை உரிமையில்லை.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு நீதிபதி குமரேஷ் பாபு, அ.தி.மு.க.தேர்தலை நிறுத்த விரும்பவில்லை. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம். தேர்தல் நடைமுறைகள் தொடரலாம். 22-ந்தேதி முழுநாள் விசாரணையை நடத்தலாம், 26-ந்தேதி தானே தேர்தல் என கூறியுள்ளார்.