தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 3வது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பின்னர் அவர் நிகழ்த்திய பட்ஜெட் உரை பின்வருமாறு,
தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறையை ரூ.62,000 கோடியிலிருந்து ரூ.30,000 கோடியாக குறைத்திருக்கிறோம்.பல நலத்திட்டங்களை செயல்படுத்தியபோதும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை மேலும் படிப்படியாக குறைக்கப்படும்.
பொருளாதார வளர்ச்சி, சமூக பாதுகாப்பிற்கு, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.மாநில அரசின் வரி வருவாய் 2020-21ல் 5.58% குறைந்தது; மாநில அரசின் வரி வருவாய் கடந்த 2 ஆண்டில் 6.11%ஆக உயர்ந்துள்ளது.
மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் ஆகியோருக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்.அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள் ரூ.5 கோடியில் தமிழில் மொழிபெயர்க்கப்படும்
உலக அளவில் தமிழ் மொழியை கொண்டு செல்வதற்காக தமிழ் பன்னாட்டு மாநாடு நடத்தப்படும். தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தி தமிழில் மென்பொருள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழறிஞர்கள் 591 பேர் இலவச பயணத் திட்டம் அமல்படுத்தப்படும்.
- இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்.இந்த பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பணிப்பலன்கள் பாதுகாக்கப்படும்.தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஆண்டில் ரூ.1,500 கோடி பள்ளி கல்வித்துறையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும். ரூ.110 கோடி செலவில் 4,5-ம் வகுப்புகளுக்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
சோழப் பேரரசு புகழை உலகறிய செய்ய தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும்.. சோழப் பேரரசின் கலைப் பொருட்களை பாதுகாக்கும் வகையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
மேலும் 8 நகரங்களில் சங்கமம் கலை விழா நடத்தப்படும். சங்கமம் கலை விழாவுக்காக வரும் நிதியாண்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க 20 புதிய நாட்டுப்புற கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
தமிழக ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தால், அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி ரூ.20 லட்சத்திலிருந்து, ரூ.40 லட்சமாக உயர்த்தப்படும்.
இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்புகள் கட்ட ரூ.223 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.சென்னை கிண்டியில் 1000 படுக்கைகளுடன் கூடிய கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும். அரசு ஸ்டான்லி மருத்துவனையில் புதிய பன்னோக்கு சிகிச்சை மையம், செவிலியர் விடுதி கட்டப்படும்.சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்படும்.சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும் என வாசித்தார்.
பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 54 அரசு தொழிற்பயிற்சி மையங்கள் திறன்மிகு பயிற்சி நிலையங்களாக மாற்ற ரூ.2783 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.