கேரளாவில் அதிகரிக்கும் கொரோனாவால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது. எக்ஸ்பிபி.1.16 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. 138 நாட்களுக்கு பிறகு நேற்று 1,134 பேருக்கு புதிதாக தொற்று பரவியது. இதனால் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 7026ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள்.
இதனால் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,30,813ஆக உயர்ந்து விட்டது. இன்புளூயன்சா வைரசுடன் சேர்ந்து கொரோனா தொற்றும் பரவி வருவதால் கேரளா உள்ளிட்ட 6 மாநில அரசுகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசு உஷார்படுத்தியது.

இந்த நிலையில் கேரளாவில் ஓரே நாளில் 210 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அதிகரித்து வரும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள், ஐசியு மற்றும் வென்டிலேட்டர் அமைப்புகளை போதிய இருப்பு வைக்க அமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும் பரிசோதனைக் கருவிகள் மற்றும் மருந்துகள் இருப்பதை உறுதி செய்யுமாறு கேரள மருத்துவ சேவைகள் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கும் அவர் உத்தரவிட்டார். மேலும் பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.