
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றம் சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏக்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து பேசிய நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6-ந்தேதி சட்ட மசோதாவை அரசுக்கு கவர்னர் ரவி திருப்பி அனுப்பினார்.
அதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
மசோதா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பது குறித்து அறிவுரை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தோம். மாணவர்களின் படைப்பாற்றல் பாதிக்கப்படுவதாக குழு அறிக்கை அளித்தது. தற்கொலையை தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது.
ஆன்லைன் தடை மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மசோதா மீது ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏக்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து பேசினார்கள். இதைதொடர்ந்து சட்ட மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.