ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை திருட்டு.. மேலும் ஒருவர் கைது..

Published:

500x300 1852182 aishwaryarajinikanth - 2026

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பணிப் பெண்ணிடமிருந்து, புகாரில் தெரிவிக்கப்பட்டதை விட அதிக நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் ஐஸ்வர்யாவிடம் விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது வீட்டு லாக்கரில் இருந்த 60 பவுன் நகைகள் திருடப்பட்டுவிட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்துள்ளார்.

அதன்படி, காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்து வந்த சென்னை மந்தவெளி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரி (46), கார் ஓட்டுநர் திருவேற்காடு மனசுரா கார்டனைச் சேர்ந்த வெங்கடேசன் (44) ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரித்தனர்.
இதில் ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரும் கூட்டுசேர்ந்து ஐஸ்வர்யா வீட்டில் நகை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கடந்த 21-ம் தேதி கைது செய்துள்ளார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

அவர்களிடமிருந்து 100 பவுன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டுப் பத்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா தனது வீட்டிலிருந்து 60 பவுன் திருடு போனதாகப் புகாரில் தெரிவித்த நிலையில் தற்பொழுது, 100 பவுனுக்கு மேல் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இது தொடர்பாக ஐஸ்வர்யாவிடம் விசாரிக்க காவல் துறை முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி, திருட்டு நகைகளை வாங்கியதாக மயிலாப்பூரை சேர்ந்த வினால்க் சங்கர் நவாலி என்பரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து திருடப்பட்ட நகைகள் தொடர்பாக கூடுதல் விவரங்களை திரட்ட போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஐஸ்வர்யாவின் லாக்கரில் சோதனை நடத்தி அவரிடமும் விசாரிக்க போலீஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா போலீசில் புகார் அளித்தபோது தனது சகோதரி சவுந்தர்யா திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்கள் அடங்கிய போட்டோ ஆல்பம் ஒன்றையும் கொடுத்துள்ளார். அந்த திருமணத்தின் போது ஐஸ்வர்யா அணிந்திருந்த விலை உயர்ந்த நகைகள்தான் திருடப்பட்டிருந்தன. இதைதொடர்ந்து வேலைக்காரப் பெண் ஈஸ்வரியிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை, ஆல்பத்தில் உள்ள போட்டோக்களுடன் ஒப்பிட்டு பார்த்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

இதன்மூலம் ஐஸ்வர்யாவின் வீட்டில் திருடப்பட்ட நகைகளும், ஈஸ்வரியின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட நகைகளும் ஒன்றுதானா? என்பதை எளிதில் கண்டு பிடித்துவிடலாம் என்று போலீசார் நம்புகிறார்கள். ஈஸ்வரியின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட நகைகளுக்கு உரிய கணக்கு காட்ட வேண்டியது கட்டாயம் என்பதால் நகைகள் பற்றிய முழு விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

ஐஸ்வர்யா வீட்டில் திருடிய ஈஸ்வரி, ரஜினி, தனுஷ் வீடுகளுக்கும் அடிக்கடி சென்று வந்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரது வீடுகளிலும் ஈஸ்வரி கைவரிசை காட்டி இருக்கலாம் என்கிற சந்தேகமும் போலீசுக்கு ஏற்கனவே ஏற்பட்டிருந்தது. இதுதொடர்பாகவும் போலீஸ் விசாரணை முடுக்கிவிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img