
2025க்குள் இந்தியாவில் காசநோயை முழுவதுமாக ஒழிப்பதே நமது குறிக்கோள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலக காச நோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு காசநோய் ஒழிப்புக்கான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவின் வருடாந்திர காசநோய் அறிக்கை 2023 வாரணாசியில் ஒன் வேர்ல்ட் காசநோய் உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்டது. காச நோயை ஒழித்த மாநில அரசுகளுக்கு பாராட்டு, விருதுகளையும் பிரதமர் மோடி வழங்கினார்.
பின்னர் உலக காசநோய் தினத்தையொட்டி ஒரே உலகம் காசநோய் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உலகம் முழுவதும் காசநோயை ஒழிக்க 2030ம் ஆண்டு கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில், காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா பல முனைகளில் இணைந்து பணியாற்றியுள்ளது. மக்கள் பங்கேற்பின் மூலம் காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா சிறப்பான பணியை செய்துள்ளது. 2025-க்குள் இந்தியாவில் காசநோயை முழுவதுமாக ஒழிப்பதே நமது குறிக்கோள் என்றார்.
கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் புதுடெல்லியில் நடைபெற்ற காசநோய் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர், நிர்ணயிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது நினைவுகூரத்தக்கது.