இன்று ஸ்ரீராமநவமி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீமந் நாராயணனின் 7-வது அவதாரமான ஸ்ரீராமபிரான் அவதரித்த நகரம் அயோத்தி. சரயு நதிக்கரையின் தென்கரையில் அமைந்துள்ள இந்நகரம் பண்டைய காலத்தில் கோசல நாட்டின் தலைநகராக இருந்தது.
அயோத்தியை தலைநகராகக் கொண்டு கோசல நாட்டை ஸ்ரீராமபிரான் ஆட்சி செய்தார். தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு மாநகராட்சியாக விளங்குகிறது.
முக்தி தரும் ஏழு புனித நகரங்களில் இதுவும் ஒன்று. இங்கு ஸ்ரீராம காவியத்துடன் தொடர்புடைய பல இடங்கள், ஸ்ரீராமருக்கு பல கோவில்கள் உள்ளன.
அதில் முக்கியமானது குழந்தை ராமர் கோயில். அதுதவிர ரகுநாயகன் அல்லது சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் ஸ்ரீராமபிரான், சீதா பிராட்டியுடன் வடக்கு நோக்கி வீற்றிருக்கும் கோலத்தில் அருள்பாலிக்கும் கோயிலும் முக்கியமானது.