
குளத்து மண்ணைத் திருடும் அவலத்தின் காரணமாக 5 இளைஞர்கள் பலி- 50 லட்சம் உதவித்தொகையும், அரசு வேலையும் வழங்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
சென்னை நங்கநல்லூர் சர்வமங்களாம்பிகை சமேத தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர உற்சவ நிறைவு நாளான தீர்த்த வாரி நேற்று (5ஆம் தேதி) காலை மூவரசம்பட்டு ஊராட்சி குளத்தில் நடைபெற்ற போது குளத்தின் மண் சரிவில் சிக்கிய ஒருவரை காப்பாற்ற போன நால்வர் உட்பட ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.
இச்செய்தி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அதிர்ச்சியான செய்தியை திசைதிருப்ப ஊடகங்களும் அரசும் செய்த முயற்சி மிக கேவலமானது.
பலியான இளைஞர்கள் கோவில் பணியாளர்கள் என்றும், கோவில் தனியார் கோவில் என்றும், கோவில் விழாவிற்கு முறையாக அனுமதி வாங்கவில்லை என்றும், கோவிலில் நடக்கும் நிகழ்ச்சியை புதிதாக வேறு இடத்திற்கு மாற்றியதால் என்றும், அந்த இளைஞர்கள் ஶ்ரீ பாதம் தாங்கிகள் எனவும் இஷ்டத்திற்கு திசை திரும்பினார்கள்.
இது குறித்து இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் திரு. சி. பரமேஸ்வரன் தலைமையில் ஒரு குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை ஆராய்ந்தது. கோவிலிலும், பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள பகுதிகளிலும் விசாரித்ததில் தான் உண்மை தெரிய வந்தது.
அந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில். வழக்கமான நடைமுறையை பின்பற்றி அரசு துறைகளிடம் விழாவிற்கு அனுமதி வாங்கியுள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி இந்த விழா நடைபெறும் போது அங்கு இல்லை. அங்கு பலியான இளைஞர்கள் ஶ்ரீபாதம் தாங்கியோ, கோவில் பணியாளர்களோ இல்லை. ஆனால் செய்திகள் எப்படி எல்லாம் பரப்பட்டது என்பதை பார்த்தால் இதன் உள்நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.
குளங்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப் படுவது ஆபத்தானது என்பதை அரசு அதிகாரிகள் உணர வேண்டும்.
குளக்கரையில் நிகழ்ச்சி நடத்திட எந்த முன்னேற்பாடும், எந்த அரசுத் துறையும் செய்யவில்லை.
திருப்பதி போல குளத்தின் மண் சமமாக உள்ளதா, அதன் ஆழத்தை கவனத்தில் கொண்டு சுற்றி கழிகளால் வேலி அமைத்து அதற்குள் செய்வதற்கு கவனம் கொடுத்திருக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பணம் வசூல் வேட்டையிலும், அமைச்சர் நிர்வாகம் செய்வதற்கு பதில் கோவில் வழிபாடுகளில் தலையிட்டு அரசியல் செய்வதுமாக இருந்து வருகிறார்கள்.
பலியான இளைஞர்கள் கல்லூரி மாணவர்கள். பொது சேவையில் ஆர்வமுடன் செயல்பட்டவர்கள். கொரோனா காலத்திலும் அந்த பகுதியில் துணிச்சலாக சேவையாற்றிய நல்ல உள்ளம் படைத்தவர்கள். அவர்கள் ஆன்மா நற்கதி அடைய இந்து முன்னணி பிரார்த்திக்கிறது. அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
பலியான இளைஞர்கள் குடும்பத்திற்கு அரசு 2லட்சம் நிதி உதவி என்பது கண்துடைப்பு. குறைந்தது 50 லட்சம் நிதியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.