
சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் இன்று பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 3- அறைகள் தரைமட்டமானது.சாத்தூர் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரியப்பன்(54) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒத்தையால் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் 10-க்கு மேற்பட்ட அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.இந்நிலையில் இந்த ஆலையின் உரிமத்திற்கான தேதி நிறைவு பெற்றதால் மீண்டும் புதுப்பிக்க பதிவு செய்துள்ளனர்.இதனால் கடந்த 10- நாட்களாக இந்த ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெறவில்லை.
ஆனால் ஆலையில் ஒரு அறையில் மட்டும் பட்டாசுக்கு தேவையான மூலப்பொருளான சல்பர் அதிக அளவில் சேமித்து வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவில் இந்த பகுதியில் லேசான மழை பெய்துள்ளது.
இதில் சல்பர் வைக்கப்பட்டிருந்த அறையில் மழைநீர் பட்டதால் வெடித்து சிதறியது.இந்த வெடி விபத்தில் ஆலையில் உள்ள 3-அறைகள் தரைமட்டம் ஆகியன. இந்த வெடி விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டாசு தொழிற்சாலையில் பணிகள் ஏதும் நடைபெறாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.