
சிவகாசியில் 90 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில்
தெலுங்கானாவை சேர்ந்த இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.தமிழகத்தின் பல இடங்களில் கொள்ளையடித்து ஒன்றரை கோடியில் சொகுசு பங்களா வாங்கி சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த குல்லா திருடர்கள் என தெரியவந்துள்ளது.
சிவகாசி அருகே சித்துராஜபுரம் தேவி நகரைச் சேர்ந்தவர் அச்சக அதிபர் பத்மநாபன் (67). இவர் கடந்த ஜனவரி மாதம் 25 ம்தேதி திருப்பதி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற நிலையில் இவரது வீட்டின் கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 90 பவுன் தங்க நகை, வைர நெக்லஸ், 3 ஜோடி வைர கம்மல், 73 கிராம் எடையில் ஒரு ஜோடி வெள்ளிக்கொலுசு, ஒரு லட்சம் ரொக்கம் திருடு போனது. அதே நாளில் அந்த பகுதியில் உள்ள தனசேகரன், சிவரம்யா உள்பட 3 பேரின் வீடுகளில் கைவரிசை காட்டிய மர்ம கும்பல் நகை, பணம் ஆகியவற்றை அள்ளிச் சென்றுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். மாவட்ட எஸ்பி சீனிவாசபெருமாள் உத்தரவின்பேரில், சிவகாசி டிஎஸ்பி தனஞ்ஜெயன் ஆலோசனையின் பேரில் திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். தனிப்படை போலீசார் கொள்ளை சம்பவம் நடைபெற்ற பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்ததில் அந்த வழியே வடமாநில வாலிபர்கள் அடிக்கடி நோட்டமிடுவதும் சம்பவத்தன்று குல்லா அணிந்த இருவர் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. இந்த சிசிடிவி பதிவுகளை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனபதை உறுதி செய்த காவல்துறை தெலுங்கானாவில் கடந்த ஒரு மாதமாக முகாமிட்டு தெலுங்கான மாநிலம் வாறாங்கல் வட பள்ளி சர்ச் பகுதியை சேர்ந்த சிவா (24) சூரியா ( 23) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 30 பவுன் நகைகளை மீட்டனர்.
இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தின் சென்னை மதுரை உள்ளிட்ட நகரங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், கொள்ளையடித்த பணம் நகையை வைத்து ஒன்றரை கோடியில் சொகுசு பங்களா வாங்கியதுடன் அவ்வப்போது கோவா உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளதும், சிவகாசிக்கு சுயதொழில் செய்ய வந்துள்ளதாக சிலரிடம் அறிமுகமாகி வீடு தேடுவது போல் நடித்து கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் உள்ளவர்களை நோட்டமிட்டு அவர்கள் வெளியூர் சென்றபோது கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். கொள்ளை வழக்கில் இவர்களுடன் தொடர்புடைய தெலுங்கானாவை சேர்ந்த மேலும் சிலர் உள்ளதாகவும் மீதமுள்ள நகையை மீட்ப்பதற்காகவும் இவர்களுடன் தொடர்புடைய மற்ற நபர்களை கைது செய்யவும் தனிப்படை போலீசார் தெலுங்கானாவில் முகாமிட்டுள்ளனர்.