
காஞ்சிபுரம் அருகே முதியவருக்கு மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடித்ததாக உறவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (72). மகன் கிருஷ்ணனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இறந்து கிடந்தார். பீரோவில் இருந்த பணம், நகை கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது. இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் அளித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் கோவிந்தனுடன் அவரதுதம்பி வெங்கடேசன் மகன் பாட்ஷாசென்றது பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் பாட்ஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில் மதுவில் விஷம் கலந்து கோவிந்தனுக்கு கொடுத்து விட்டு அவர் இறந்ததும் அவரிடம் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் 15 பவுன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பாட்ஷாவையும் கைது செய்தனர்.