சித்திரை( மேஷ )விஷூ பூஜையையொட்டி சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை 5.00 மணிக்கு திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து ஸ்ரீ கோவிலில் தீபம் ஏற்றுவார். பின்னர் ஆழி குண்டத்தில் தேங்காய் கொண்டு ஏற்றப்பட்ட பிறகு பக்தர்கள் பதினெட்டாம் படி ஏற அனுமதிக்கப்படுகிறார்கள்.
தொடக்க நாளில் சிறப்பு பூஜைகள் இருக்காது.ஏப்ரல் 12ம் தேதி முதல் அதிகாலை 4.30 மணிக்கு திருக்கோயில் எழுந்தருளல், 5.00 மணிக்கு நடைதிறப்பு நிர்மால்ய தரிசனம் நடக்கிறது. பின்னர் கிழக்கு மண்டபத்தில் கணபதி ஹோமம், 5:30 மணிக்கு நெயாபிஷேகம், அஷ்டாபிஷேகம் நடக்கிறது.
மதியம் 1 மணிக்கு நடை மூடப்பட்டு, மாலை 5.00 மணிக்கு திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு தீபாராதனைக்கு பின் புஷ்பாபிஷேகம், படிபூஜை நடக்கிறது. இரவு 10.00 மணிக்கு நடை மூடப்படும்.15ம் தேதி அதிகாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை விஷுகனி தரிசனம். சுவாமியை தரிசனம் செய்த பிறகே பக்தர்களுக்கு விஷுகனி தரிசனம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தந்திரியும், மேல்சாந்தியும் இணைந்து பக்தர்களுக்கு கை நீட்டம்காசு கொடுக்கின்றனர். ஏப்ரல் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை பல்வேறு பூஜைகள் நடைபெறும். விஷு பூஜை, மேடமாசம் பூஜை முடிந்து ஏப்ரல் 19ம் தேதி இரவு 10.00 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.