
திருப்பதி ஏழுமலையானுக்கு கடந்த 1715-ம் ஆண்டு பூந்தி தயாரித்து படையிலிடப்பட்டு வந்தது. 1940-ம் ஆண்டு பூந்திக்கு பதிலாக லட்டு தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் திருமலையில் ஒரு ஆண்டிற்கு 12 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.
திருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசனத்திற்கு செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவை பக்தர்கள் புனிதமாக கருதுகின்றனர்.
திருப்பதி ஏழுமலையானுக்கு கடந்த 1715-ம் ஆண்டு பூந்தி தயாரித்து படையிலிடப்பட்டு வந்தது. பின்னர் அதிக அளவில் பூந்தி தயாரித்து 1803 ஆம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு விற்பனை செய்து வந்தனர்.
அதனை தொடர்ந்து 1940-ம் ஆண்டு பூந்திக்கு பதிலாக லட்டு தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பக்தர்களுக்காக தயார் செய்யப்படும் லட்டுகளில் ஏலக்காய், கல்கண்டு, முந்திரி, திராட்சை, பச்சை கற்பூரம், குங்குமப்பூ, சர்க்கரை கலவை மற்றும் பச்சைப்பயறு மாவு ஆகியவற்றைக் கொண்டு மிகவும் கவனமாகவும் தரமாகவும் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
தினமும் 4 முதல் 4½ லட்சம் லட்டுக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில மாதங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் கூடுதலாக லட்டுகளை தயாரிக்க வெளிநாடுகளில் இருந்து ரூ.50 கோடி மதிப்பில் பூந்தி தயாரிக்கும் எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு தற்போது லட்டுக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தினமும் சராசரியாக தரிசனத்திற்கு வரும் 70 ஆயிரம் பக்தர்களுக்கு 1 லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. தேவஸ்தான ஊழியர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட லட்டுகள் தரமாக இருந்ததாகவும் தற்போது எந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் லட்டுகள் தரம் குறைந்து காணப்படுவதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில்:- எந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் லட்டுகளும் தரமானதாக தான் உள்ளது. லட்டுக்களின் தரத்தை பரிசோதிப்பதற்காக தனியாக தேவஸ்தான அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
திருப்பதி தேவஸ்தானம் மூலம் தினமும் சராசரியாக 4 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் மாதத்திற்கு ஒரு கோடி லட்டுகள் என 12 மாதத்திற்கு 12 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதியில் நேற்று 69,782 பேர் தரிசனம் செய்தனர். 27,552 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.16 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.