தமிழகத்தில் கரோனா அதிகரிப்பு சட்டப் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்-இபிஎஸ்

Published:

images 5 - 2026
#image_title

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக சட்டப் பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

சட்டப் பேரவையில், கேள்வி நேரம் முடிந்த பிறகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில், ”தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400ஐ நெருங்கி இருப்பதாகவும், இருவர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும், பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளிவருகின்றன.

எனவே தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட வேண்டும். மேலும், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வீடுவீடாகச் சென்று பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.

இந்த பரிசோதனையின்போது தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா பிரிவை ஏற்படுத்தி, மற்ற நோயாளிகளிடமிருந்து தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

தமிழகம் முழுவதும் கரோனா நோய் தடுப்பு சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட வேண்டும். கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் முகக்கவசம் அணிவது தொடர்பாக அரசின் நிலைபாடு குறித்து பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்” என பேசினார்.

இதற்கு விளக்கம் அளித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, மருத்துவமனைகளில் தான் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் பாராட்டினார். மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் நிலை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மாவட்ட மருத்துவமனைகளில் மாதிரி மருத்துவ பயிற்சி நடத்தப்படாது. தமிழகத்தில் மட்டுமில்லை, பிற மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் உயிர் பாதிக்கும் தொற்று இல்லை.

ஒரே இடத்தில் கூட்டமாக பாதிக்கப்பட்டால் 4வது அலை என சொல்லலாம். இப்போது அந்த நிலை இல்லை. பாதிப்புகள் அதிகரித்தால் பொது இடங்களில் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். 2067 மெட்ரிக் டன் ஆக்ஸின் வைத்துக்கொள்ளும் அளவுக்கு கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு பெரிய அளவில் இல்லை, தனி நபர் என்ற அளவில் தான் உள்ளது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img