தமிழக சட்டசபை நடுநிலையாக செயல்படவில்லை என்றும், ஆளும்கட்சியினரின் கண் அசைவிற்கு ஏற்ப சபாநாயகர் செயல்படுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசுவதை நேரலை செய்வதில் அரசு புறக்கணிப்பதாக கூறி சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: விருத்தாச்சலத்தில் திமுக கவுன்சிலர் 6 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த விவகாரம் குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பினேன். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் நேற்றிரவே புகார் அளித்தும் இன்று காலை வரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை, 13 மணி நேரம் கழித்தே கைது செய்துள்ளனர்.
வழக்கில் தொடர்புடைய திமுக நபரை காப்பாற்ற இந்த அரசு முயற்சித்தது.
பெண் குழந்தைகள் குறித்து சட்டசபையில் நான் பேசுவதற்கு முன்பும், பின்பும் இருக்கும் காட்சிகளை நேரலையில் காண்பிக்கின்றனர்.
ஆனால், நான் பேசுவதை ஒளிபரப்பாமல் புறக்கணிக்கின்றனர். கேள்வி கேட்பதை ஒளிபரப்பாமல், பதில் சொல்வதை ஒளிபரப்புகின்றனர்.
சட்டசபை எங்கே ஜனநாயக முறைப்படி நடக்கிறது? சட்டசபை நடுநிலையாக செயல்படவில்லை; ஆளும்கட்சியினரின் கண் அசைவிற்கு ஏற்ப சபாநாயகர் செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்
இதன் பிறகு, சட்டசபையில் நேரடி ஒளிபரப்பு குறித்து விவாதம் நடந்தது. அப்போது பழனிசாமி பேசுகையில், நான் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை உள்ளது? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு சபாநாயகர் அப்பாவு அளித்த விளக்கத்தில், நேரடி ஒளிபரப்பு செய்வதில் எந்த உள்நோக்கமும் இல்லை. சட்டசபை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்புகள் இனி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனக்கூறினார். சபாநாயகரின் விளக்கத்தை ஏற்காத அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.