November 9, 2024, 7:03 PM
29.6 C
Chennai

பஞ்சாப் துப்பாக்கி சூட்டில் இறந்த 4 ராணுவ வீரர்களில் இருவர் தமிழர் ..

500x300 1864942 kamalesh

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்த துப்பாக்கி சூட்டில் பீரங்கி படைப்பிரிவை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் இறந்ததில் இருவர் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் ஆவர்.

இறந்த வர்கள் பெயர்கள் சாகர் பன்னே (வயது 25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) என்று தெரியவந்தது. இதில் பலியான ராணுவ வீரர் கமலேஷ், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். கமலேஷின் சொந்த ஊர் சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி மசக்காளியூர் பனங்காடு பகுதி ஆகும். இவருடைய தந்தை ரவி, நெசவு தொழிலாளி ஆவார். தாய் செல்வமணி. இவர்களின் 2-வது மகனான கமலேஷ் பி.ஏ. பொருளாதாரம் படித்துவிட்டு திருமணம் ஆகாத நிலையில், ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.

சிறு வயது முதலே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை ஆற்ற வேண்டும் என விரும்பினார். அதன்படி அவர் தனது தொடர் முயற்சியினால் ராணுவத்தில் சேர்ந்து தனது விருப்பதை நிறைவேற்றினார். கடைசியாக பஞ்சாப்பில் உள்ள பதிண்டா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார்.

ALSO READ:  உவரி கோயில் அர்ச்சகர்களை மிரட்டி வெளியேற்றிய அறநிலையத்துறை; இந்து முன்னணி கண்டனம்!

நேற்று அதிகாலை கமலேஷ் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்ததும் அவரது குடும்பத்தினர் துடிதுடித்தனர். கமலேஷ் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு தான் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து விட்டு திரும்பி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலேசுக்கு சந்தோஷ் (27) என்ற அண்ணன் உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் கமலேஷ் இறந்தது அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் மசக்காளியூர் பனங்காடு கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது வீட்டில் கமலேஷ் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் தொடர்ந்து கதறி அழுதபடி உள்ளனர்.

கிராம மக்கள், அவரது வீட்டின் முன்பு திரண்டு உள்ளனர். இதனால் ஊரில் எங்கு பார்த்தாலும் சோகமாக காணப்படுகிறது. வீரமரணம் அடைந்த கமலேஷ் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

பஞ்சாப்பில் உயிரிழந்த தேனி ராணுவ வீரர்- ஒரே மகனையும் பறிகொடுத்த விவசாயி குடும்பத்தினர்..

500x300 1864951 theni

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 வீரர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதில் உயிரிழந்த ஒருவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் குமார் (வயது 25) என்பது தெரிய வந்துள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூணாண்டிபட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயராஜ். இவரது மனைவி ரத்தினம். இவர்களுக்கு 2 மகள்களும், யோகேஷ்குமார் என்ற ஒரே மகனும் உள்ளனர்.

ALSO READ:  செங்கோட்டை அருகே உள்ள சீவநல்லுார் அரசு பள்ளியில் ரோட்டரி கிளப் சார்பில் 78வது சுதந்திர தினவிழா.

2 மகள்களுக்கும் திருமணம் ஆகி விட்டது. சாதாரண ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த யோகேஷ்குமார் தான் ராணுவத்தில் சேர்ந்து தனது குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்று கடுமையாக உழைத்துள்ளார். தந்தைக்கு விவசாயத்திற்கு உதவியாக இருந்து விட்டு மாலையில் கடுமையான உடற்பயிற்சி செய்து வந்தார். பிளஸ்-2 வரை தேனியில் படித்த யோகேஷ்குமார் அதன் பிறகு உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் படித்து முடித்தார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்த அவர் தனது கடுமையான உழைப்பினாலும் உயர் அதிகாரிகளுக்கு கீழ்படிந்து பணி செய்ததாலும் அனைவரிடமும் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார். இன்னும் திருமணம் ஆகாத யோகேஷ்குமாருக்கு அடுத்த ஆண்டு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் தனது ஒரே மகனை பறிகொடுத்த ஜெயராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த பொங்கல் விடுமுறையின் போது ஊருக்கு வந்த யோகேஷ்குமார் தனது சகோதரிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தினார். விடுமுறைக்கு எப்போது சொந்த ஊருக்கு வந்தாலும் தனது சகோதரிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார்.

ALSO READ:  திருப்பரங் குன்றத்தில் விநாயகர் கோயில் இடித்து அகற்றம்! போராடிய இந்து இயக்கத்தினர் கைது!

மேலும் சொந்த ஊரிலும் யோகேஷ்குமார் நல்ல முறையில் அறியப்பட்டு அனைவரிடத்திலும் பாசத்துடன் பழகி வந்துள்ளார். சிறு வயது முதலே கஷ்டப்பட்டு ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்ததால் அவரது நண்பர்களையும் ராணுவத்தில் சேர்க்க உதவி வந்துள்ளார். மேலும் பல ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து சாதனை படைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் துரதிஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யோகேஷ்குமாரின் உடல் இன்று மாலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் அவரது ஊரில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. யோகேஷ்குமாரின் மறைவு மூணாண்டிபட்டி மட்டுமின்றி சுற்றுப்புற கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week