கொடைக்கானல், பழநி வனப்பகுதிகளில் மீண்டும் ஏற்பட்ட காட்டுத் தீயை விடிய விடிய போராடி, வனத் துறையினர் அணைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பழநி வனப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் பசுமை குறைந்து மரங்கள், செடிகள், புற்கள் காய்ந்து வருகின்றன. அவ்வப்போது காய்ந்த சருகுகளில் தீப்பற்றி, காட்டுத் தீ பரவி வருகிறது.
இதில் அரிய வகை மரங்களும், தாவரங்களும் கருகி வருகின்றன. கடந்த மார்ச் மாதம் கொடைக்கானல் மலைப் பகுதியில் பரவலாக பெய்த மழையால், காட்டுத் தீ முழுவதுமாக கட்டுக்குள் வந்தது. இதனால், வனத் துறையினர் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஏப்.12) இரவு கொடைக்கானல், பழநி வனப்பகுதியை யொட்டி உள்ள மலைக் கிராமங் களான பள்ளங்கி, கோம்பை பகுதிகளில் உள்ள வனங்களில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான மரங்களும், தாவரங்களும் தீயில் கருகின.
தீ கொழுந்து விட்டு எரிந்ததாலும், கரும்புகை பரவியதாலும், வனத் துறையினர் தீயை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் அடைந்தனர். பின்னர், விடிய விடிய போராடி நேற்று காலை தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இது குறித்து வனத் துறையினர் கூறுகையில், விவசாயிகள், தனியார் எஸ்டேட் உரிமையாளர்கள் வனத்துறை அனுமதியின்றி தீ வைக்கக் கூடாது. இதனால், வனப்பகுதிக்கு தீ பரவும் அபாயம் உள்ளது. காட்டுத் தீ குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்