தமிழ் எழுத்துக்களை நினைவுகூரும் 247 மலையேற்ற படிகள் அமைந்த காட்டழகர் பெருமாள் கோவில்
பாவங்களையும், நோய்களையும் தீர்க்கும் தலமாக இக்கோவில் விளங்குகிறது. 247 படிக்கட்டுகளுக்கு முன்னதாக நூபுரகங்கை தீர்த்தம் உள்ளது. இன்று (14.4.2023) சித்திரை-1, தமிழ்ப் புத்தாண்டு. தமிழுக்கு பெருமை சேர்க்க பாண்டிய மன்னர் ஆட்சிக்காலத்திலேயே மலையில், 247 தமிழ் எழுத்துக்களை குறிக்கும் வகையில் 247 படிகளை அமைத்து, அதில் பக்தர்கள் ஏறிச்சென்று பெருமாளை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்றால் யாருக்குத்தான் ஆச்சரியம் வராது.
வனப்பகுதிக்குள் அமைந்துள்ள அந்த தலம் எங்கிருக்கிறது என ஆவல் ஏற்படுவதும் சகஜம்தான். இந்த கட்டுரையின் மூலமாக அந்த தலத்தை தரிசிப்போம்.. வாருங்கள்…! பெருமாளின் சயன கோலத்தில் ஆண்டாள் பிறந்த புண்ணிய பூமியான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அதன் அருகேதான் காட்டழகர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 9 கி.மீ. தூரம் சாலை மார்க்கமாக சென்றால் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரமான செண்பகத் தோப்பை அடையலாம். அங்கிருந்து 7 கி.மீ. மலைப்பகுதியில் நடந்து சென்றால், பெருமாள் மலை வரும்.
அந்த மலை அடிவாரத்தில்தான் காட்டழகர் சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறம் உள்ள மலை தோற்றத்தை பார்த்தால் பெருமாள் சயன கோலத்தில் இருப்பது போலவே காட்சி அளிக்கும். பாவங்களையும், நோய்களையும் தீர்க்கும் தலமாக இக்கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் சுந்தரராஜ பெருமாள் என்று அழைக்கப்படும் காட்டழகர், சவுந்தரவல்லி, சுந்தரவல்லி தாயாருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
சுந்தரராஜ பெருமாளை தரிசிக்க வேண்டும் என்றால் 247 படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல வேண்டும். இந்த 247 படிக்கட்டுகள் என்பது தமிழ் எழுத்துகளை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த படிக்கட்டுகள் பாண்டிய மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். 247 படிக்கட்டுகளுக்கு முன்னதாக நூபுரகங்கை தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்திற்கு தண்ணீர் எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது? என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஆண்டு முழுவதும் தண்ணீர் வந்து கொண்டுதான் இருக்கும். இந்த தீர்த்தத்தில் இரும்பு மற்றும் கந்தக சத்துகள் நிறைந்துள்ளன. இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி விட்டு தமிழ் எழுத்துக்களுக்கு பெருமை சேர்க்கும் படிக்கட்டுகளில் கோவிந்தா, கோபாலா என பக்தி கோஷமிட்டுக் கொண்டே படிகள் ஏறி, மூலவரை தரிசித்தால் சகல ஐஸ்வரியங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.
இந்த கோவிலானது வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்து இருக்கும். மற்ற நாட்களில் பூஜைகள் நடக்காது. அதேபோல ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் உண்டு. சித்திரை, புரட்டாசி மாதங்களில் அன்னதானமும் நடைபெறும்.
இக்கோவிலின் மகிமை அறிந்து, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வருகிறார்கள். இன்று சிறப்பு பூஜை தமிழ் வருடப்பிறப்பான இன்று (14.4.2023) காட்டழகர் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை பூஜை வழிபாடுகள் நடைபெற்றது . திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அதேபோல மழை பெய்து இந்த பகுதியில் உள்ள கண்மாய்கள் பெருகினால் அழகருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படிக்கட்டுகளுக்கு சிறப்பு பூஜை செய்வது வழக்கம். பொதுவாக இந்த படி பூஜை மார்கழி மாதம் நடைபெறும்.