
சபரிமலையில் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி கோலாகலமாக இன்று நடைபெற்றது. சித்திரை விஷூ நாளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. கோவில் நடை 19-ந்தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை மாத பிறப்பையொட்டி ஏப்11ல் மாலை கோவில் நடை திறக்கப்பட்டது.

சபரிமலையில் நடை பெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி இன்று அதிகாலை கோயில் நடை திறந்ததும் துவங்கி நடைபெற்றது. சித்திரை முதல் நாளில் இறைவன் முன்பு படைக்கப்படும் காய், கனி வகைகளை பார்த்து சாமி தரிசனம் செய்தால் அந்த ஆண்டு இனிமையாகவும், வளமையாகவும் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதற்காக சித்திரை விஷூ நாளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அப்போது காய்,கனிகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பூஜைகள் முடிந்த பின்னர் சாமி முன்பு படைக்கப்பட்ட பணம் பக்தர்களுக்கு கை நீட்டும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதனை கோவில் தந்திரி மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி ஆகியோர் வழங்கினர். சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி முடிந்ததும் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. கோவில் நடை வருகிற 19-ந் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.