
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான அத்திகோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதி அருகே உள்ள 5 அடி பள்ளத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் யானை விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது.
இங்குள்ள வனப்பகுதியில் யானை, புலி, காட்டெருமை, மான், மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளது. வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை அவ்வப்போது அப்பகுதிக்கு வந்து சென்றுள்ளது.
இந்நிலையில் இந்த பெண் காட்டு யானை இரவு இறைத் தேடி வந்த போது. மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள வனப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட மண் அரிப்பால் சுமார் 5 அடி பள்ளம் உருவாகி இருந்துள்ளது.
அவ்வழியாக வந்த வந்த பெண் காட்டு யானை அந்தப் பள்ளத்திற்குள் விழுந்ததில் உயிரிழந்துள்ளது. இன்று காலை அப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் மற்றும் அப்பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் இச் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் இறந்த யானையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர். பள்ளத்தில் விழுந்து பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.