
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் 22ஐம்பொன் சிலைகள், 15 பீடம் மற்றும் 462 செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.இவௌ
1000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்க கூடும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான வரலாற்று சிறப்புமிக்க சட்டைநாதர் கோவிலில் திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
இக்கோயில் பிரம்ம தீர்த்த குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு சிவன் பார்வதி நேரில் காட்சியளித்து பார்வதி திருஞானசம்பந்தருக்கு ஞானபால் கொடுத்த புகழ்பெற்ற தலமாகும் இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக கோவிலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் யாகசாலை அமைப்பதற்காக மண் எடுக்க மேற்கு கோபுர வாயிலில் கோயில் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோன்டியபோது 2 அடியில் புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர்,முருகர், வள்ளி,தெய்வானை, சோமஸ்கந்தர்,அம்பாள், பூர்ண புஷ்கலா அய்யனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 2 அடி முதல் அரை அடி வரை உள்ள 22 ஐம்பொன் சிலைகளும், மேலும் 462 திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தேவார செப்பேடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.
அதனை தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் பார்வையிட்டு எந்த காலத்துக்குரிய சிலைகள் என ஆய்வு செய்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் தொல்லியல் துறை மண்டல ஆலோசகர்கள் மதிவாணன், சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா தாசில்தார் செந்தில்குமார் ஆகியேர் சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் .
இதுவரையில் இதுபோன்று எங்கும் கிடைக்காத வகையில் ஒரே இடத்தில் 22ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதால் சீர்காழி பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது,இதனை அனைவரும் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் தொல்லியல் துறையினர் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலை எனவும் ,13 நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து சிலைகள் எனவும் செப்பேடுகள் இதுவரை எங்கும் கிடைக்காத நிலையில் முதல் முறையாக கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.