
அரசு விரைவு பேருந்துகளில் கட்டண சலுகை கிடையாது என போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது அரசு விரைவு பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது என்பதால் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ரூ.50 முதல் ரூ.150 வரை கூடுதலாக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் கோடை விடுமுறை முழுவதும் லீன் கட்டண முறை நீக்கம் செய்யப்படுகிறது. மேலும் அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகளில், வார நாட்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகையும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ரூ.50 முதல் ரூ.150 வரை கூடுதலாக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு விரைவு பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போதிய வருவாய் ஈட்ட போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
போக்குவரத்து துறை சார்பாக பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், கடந்த 2019 ஆம் ஆண்டு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் எளிய கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி பயணிகளை ஈர்ப்பதற்காக வார நாட்களில் பேருந்துகளில் பயணம் செய்யும் போது 10% முதல் 25% வரை கட்டணம் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது . அதேசமயம் வார இறுதி நாட்களில் அதாவது வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் சலுகைகள் எதுவும் இல்லாமல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்தநிலையில் தமிழக போக்குவரத்து கழகம் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முடியாத நிலையில் உள்ளதால் இந்த கட்டண சலுகை முறை ரத்தாகியுள்ளது.