மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா வசதிகளை செய்து தர உத்தரவிடக்கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்தது மதுரை கிளை உயர்நீதிமன்றம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. தாழ்வான மின் வயர்களை சரி செய்வது, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி அழகர் வைகையில் எழுந்தருளல் என தொடர்ச்சியாக விழாக்கள் நடைபெறும்.
இந்த ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி முதல் மே 9-ந் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து கலந்து கொள்வர். கடந்த ஆண்டு கூட்ட நெரிசலால் 2 பேர் மூச்சு திணறி உயிரிழந்ததோடு, 24 பேர் காயமடைந்தனர்.
ஆகவே இந்த ஆண்டு அதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
எனவே மதுரை சித்திரை திருவிழாவின்போது மீனாட்சி அம்மன் மற்றும் கள்ளழகர் கோவிலில் இலவச தரிசனம் செய்வதற்கும், குடிநீர், கழிப்பறை வசதிகளை செய்து தருவதற்கும், சாலைகளை முறையாகவும், தூய்மையாகவும் பராமரிப்பது, போதுமான மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருப்பது, தாழ்வான மின் வயர்களை சரி செய்வது, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதே போல மதுரையை சேர்ந்த ரமேஷ் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவில்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவிடுமாறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் சித்திரை திருவிழாவை நடத்தும் மீனாட்சி அம்மன் மற்றும் அழகர் கோவில் நிர்வாகத்தினரும், மாவட்ட நிர்வாகமும் சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்வர். மனுதாரரின் மனு தொடர்பாக அவர்களே முடிவெடுப்பர். ஆகவே நீதிமன்றம் இதில் தலையிட இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.