
ராஜபாளையம் நகராட்சியில் வரி குறைப்பு அரசாணையை அமல்படுத்த கோரி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
அலட்சியமாக பதில் அளித்த அதிகாரியால் மக்கள் கொந்தளிப்பானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம். ராஜபாளையம் நகராட்சியில் அதிகமாக உள்ள சொத்து வரி மற்றும் குடிநீர் வரி குறைக்க வலியுறுத்தி, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களால் வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு சார்பில் வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த மார்ச் 28-ம் தேதி முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு உயர்த்தப்பட்ட குடிநீர் வழி திரும்ப பெறப்பட்டது. மேலும் மார்ச் 26-ம் தேதி
எம் எல் ஏ .மற்றும் வட்டாட்சியர் நகராட்சி தலைவர் ஆகியேருடன் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில், ஏப்ரல் 20-ம் தேதிக்குள் சொத்து வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த மார்ச் 31- ம் தேதி ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரியை 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை குறைக்க அரசாணை வெளியிடப்பட்டது.
அரசாணை வெளியிட்டு 20 நாட்கள் ஆன பின்னும் வரி குறைப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் சொத்து வரி செலுத்த சென்றவர்களிடம் பழைய வரி விகிதப்படி அதிகாரிகள் வசூல் செய்தனர்.
இதையடுத்து ராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் மாரியப்பன், ராமச்சந்திர ராஜா, மணிகண்டன் உள்ளிட்டோர் வருவாய் பிரிவு அதிகாரிகளிடம் வரி குறைப்பு அரசாணையை அமல்படுத்துங்கள் அல்லது அதுவரை வரி வசூலை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு வருவாய் ஆய்வாளர் முத்துகுமார், வரி வசூல் செய்ய வேண்டாம் என்றால் நகராட்சி அலுவலகத்தை பூட்டி விட்டு சென்று விடவா என்று அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த வரி உயர்வு எதிர்ப்பு போராட்ட குழுவினர், அறிவுரைப்பு அரசாணை செயல்படுத்தாத ராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.