
சித்திரை மாதம், கார்த்திகை நட்சத்திரம் நாளில் திருச்சி அருகே திருவெள்ளறையில் 8ம் நூற்றாண்டில் அவதரித்தவர் சுவாமி உய்யக்கொண்டார்.
இவரும், குருகைக் காவலப்பனும் நாதமுனிகளுடைய முக்கியமான சிஷ்யர்கள். நாதமுனிகள் அஷ்டாங்க யோகத்தை குருகைக் காவலப்பனுக்குக் கற்றுக்கொடுத்தார். அஷ்டாங்க யோகத்தின் மூலம் ஒருவர் எந்த தடையும் இல்லாமல் எம்பெருமானை அனுபவிக்க முடியும்.
நாதமுனிகள், உய்யக்கொண்டாரிடம் உமக்கும் அஷ்டாங்க யோகத்தை கற்றுக்கொள்ள ஆசை உண்டோ? என்று கேட்க, உய்யக்கொண்டார் “பிணம் கிடக்க மணம் புணரலாமோ?” என்று கூறினார்.
இதற்கு அர்த்தம் என்னவென்றால் “அறியாமையால் பலரும் இந்த சம்சாரத்தில் இருந்து கஷ்டப்பட, அடியேன் மட்டும் எப்படி தனியாக பகவத் அனுபவம் பண்ணமுடியும்” என்று கேட்டார்.
இதைக் கேட்ட நாதமுனிகள் மிகவும் மகிழ்ந்து, அவருடைய பெருந்தன்மையை “இந்த வையம் உய்யக் கொண்டீரோ?” என்று பாராட்டி அருளிச்செயல் மற்றும் அதனுடைய சகல அர்த்தத்தையும் அவருக்குக் கற்றுக்கொடுத்தார். அன்றிலிருந்து அவருக்கு “உய்யக்கொண்டார்” என்ற திருநாமம் பிரசித்தியானது.