
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா இன்று வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று ஏப்ரல் 23 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.வரும்மே மாதம் 8 ம் தேதி வரை நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொடியேற்ற விழாவை முன்னிட்டு இனறு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர்-மீனாட்சி ஆகியோர் சுவாமி சன்னதியின் முன்உள்ள கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.கொடியேற்று விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மற்றும் கோயில் நிர்வாகம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழா நடக்கும் நாட்களில் தினமும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் கற்பகவிருட்சம், பூதம், வெள்ளி சிம்மாசனம், தங்க சப்பரம், ரிஷபம், மரவர்ண சப்பரம், இந்திர விமானம் உள்ளிட்ட வாகனங்களில் 4 மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். மதுரை மாநகரம் எங்கும் மல்லிகை மணக்கும்.
16 நாட்கள் நடைபெற உள்ள இவ்விழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி பட்டாபிஷேகம் ஏப்ரல் 30 ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு பிறகு மே 01 ம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயமும், மே 02 ம் தேதி மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.மே5ல் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில் வருடத்தின் அனைத்து மாதங்களும் திருவிழாக்களும், உற்சவங்களும் காணும் கோவில். நவராத்திரி, சிவராத்திரி மட்டுமல்ல சிவ பெருமான் தன்னுடைய 63 திருவிளையாடல்களையும் நிகழ்த்திக் காட்டிய தலம் என்பதால், ஒவ்வொரு திருவிளையாடலும் வெகு சிறப்பாகக் கொண்டாப்படுவது வழக்கம்.
வருடம் முழுவதும் உற்சவங்கள் நடைபெற்றாலும் மிகவும் பிரசித்தி பெற்றவை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் தான். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என்றதுமே நினைவிற்கு வருவது சித்திரை திருவிழா தான். இது சைவ – வைணவ ஒற்றுமையை உணர்த்தும் விழாவாகவும் விளங்குவதால் சிவனடியார்கள் மட்டுமல்ல திருமால் பக்தர்களும் கொண்டாடும் பெருவிழா ஆகும்.
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக குறிப்பிடப்படுவது மீனாட்சி திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் தான். மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தின் போது பெண்கள் பலரும் தங்களின் தாலி சரடுகளை மாற்றி, மாங்கல்ய பலத்திற்காக வேண்டிக் கொள்வது வழக்கம். மீனாட்சி திருக்கல்யாணத்தை பார்த்தாலோ, அதில் கலந்து கொண்டாலோ திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும் என்பதை நம்பிக்கையாக பக்தர்கள் கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு திருவிழா நிகழ்ச்சி விபரக்குறிப்பு..
ஏப்ரல் 23 – சித்திரை திருவிழா கொடியேற்றம் – கற்பக விருக்ஷம், சிம்ம வாகனம்
ஏப்ரல் 24 – பூத வாகனம், அன்ன வாகனம்
ஏப்ரல் 25 – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
ஏப்ரல் 26 – தங்க பல்லக்கு
ஏப்ரல் 27 – வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்
ஏப்ரல் 28 – சைவ சமயம் ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்
ஏப்ரல் 29 – நந்திகேஸ்வரர், யாளி வாகனம்
ஏப்ரல் 30 – மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலா
மே 01 – மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா
மே 02 – மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – யானை வாகனம், புஷ்ப பல்லக்கு
மே 03 – தேரோட்டம் – சப்தாவர்ண சப்பரம்
மே 04 – தீர்த்தவாரி – வெள்ளி விருச்சபை சேவை
மே 04 – கள்ளழகர் எதிர்சேவை
மே 05 – கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் – 1000 பொன்சப்பரம்
மே 06 – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல்
மே 06 – இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார காட்சி
மே 07 – கள்ளழகர் மோகினி அவதார திருக்கோலம் – புஷ்ப பல்லக்கு
மே 08 – கள்ளழகர் திருமலை எழுந்தருளல் நடைபெறும்.