
திருப்பதி திருமலை ஏழுமலையானுக்கு வெளிநாட்டு பக்தர்கள் அவரவர் நாட்டு கரன்சிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இவற்றை நம் நாட்டு ரூபாயாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
இதற்கு, வெளிநாட்டு கரன்சிகளை மாற்றும் சட்டத்தின் கீழ் காணிக்கை செலுத்தியவரின் முழு விவரத்துடன், சில நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். ஆனால் இதற்கான உரிமத்தை திருப்பதி தேவஸ்தானம் கரோனா பரவலுக்கு முந்தைய ஆண்டு முதல் புதுப்பிக்காததால் ரூ.30 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் தேவஸ்தானத்திடமே தேங்கியுள்ளன.
இதனை மாற்ற வேண்டுமானால், இதற்கான அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியதன்படி, திருப்பதி தேவஸ்தானம் கடந்த 15 நாட்களுக்கு முன் ரூ.3 கோடி அபராதம் செலுத்தி உரிமத்தை புதுப்பித்தது.
இதனிடையே உண்டியலில் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் விவரம் தெரிய வாய்ப்பில்லை என்பதால் இதற்கு விலக்கு அளிக்க தேவஸ்தானம் கேட்டுக் கொண்டது. இதை பரிசீலித்த உள்துறை அமைச்சகம், பக்தர்களின் விவரம் அளிக்க தேவஸ்தானத்துக்கு விலக்கு அளித்து, வெளிநாட்டு கரன்சிகளை காணிக்கையாக பெறவும், வங்கிகளில் மாற்றிக்கொள்ளவும் அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து ரூ.30 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி, இந்திய ரூபாயாக மாற்றுவதற்காக வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது