
கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி, சட்டையுடன் பிரதமர் மோடி…! கொச்சி கடற்படை தளத்தில் இருந்து நடைபயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகை தந்தார். கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி, சட்டையுடன் பிரதமர் மோடி வந்தார். கொச்சி கடற்படை தளத்தில் இருந்து நடைபயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பா.ஜ.க. இளைஞர் பாசறை சார்பில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மேலும் கிறிஸ்தவ மத தலைவர்களை சந்தித்தும் பேசுகிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்ததும் இரவு கொச்சியில் உள்ள தாஜ்மலபார் ஓட்டலில் ஓய்வு எடுக்கிறார். நாளை செவ்வாய்க்கிழமை காலையில் திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

பின்னர் சென்டிரல் ஸ்டேடியத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். கேரளாவில் முதன் முறையாக திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி பயணத்தின் போது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் கடிதம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்தது. மேலும் பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு விவரங்கள் அடங்கிய 49 பக்கமும் சமூகவலைதளத்தில் கசிந்த சம்பவமும் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மற்றும் அவருடைய பாதுகாப்பு விவரம் கசிந்ததை தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே மோடி நிகழ்ச்சி நடைபெறும் கொச்சியில் 2 ஆயிரம் போலீசாரும், திருவனந்தபுரத்தில் 3 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் நிகழ்ச்சி நடக்கும் திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையம், சென்டிரல் ஸ்டேடியம் ஆகியவை தற்போது முழுக்க முழுக்க சிறப்பு பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவையொட்டி சென்னை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வரும் ரெயில்கள் திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வராது. இந்த ரெயில்கள் கொச்சுவேளி, நெய்யாற்றின்கரை, நேமம், கழக்கூட்டம் ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்லும்.