தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சென்னை ஆதம்பாக்கம், தில்லை கங்காநகர், 12-வது தெருவில் வசித்த சிவகாமிசுந்தரி என்ற 81 வயது பெண் வீட்டில் தனியாக இருந்த போது, பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த மற்றும் வீட்டில் இருந்த 45 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
கடந்த 21-ந்தேதி நடந்த இந்த கொலை வழக்கில் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில், 48 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்ய தீர்மானித்தோம். நான், இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி, துணை கமிஷனர் தீபக் சிவாச் ஆகியோருடன் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டேன். கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. வீட்டு கதவு உள்பக்கம் பூட்டப்பட்ட நிலையில் கொலை நடந்துள்ளது. மேலும் நகை-பணமும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கொலையாளி வீட்டுக்குள் எப்படி நுழைந்தான் என்பது புரியாத புதிராக இருந்தது. கொஞ்சம் சவாலான வழக்காக இருந்தது.
இந்த வழக்கில் துப்பு துலக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா எங்களுக்கு இந்த வழக்கில் துப்பு துலக்க ஏதுவாக இருந்தது. கண்காணிப்பு கேமராவில் நீலகலர் சட்டை அணிந்த ஒருநபர், முகத்தில் நீலகலர் முககவசம் அணிந்த நிலையில், நீலகலர் குடை பிடித்துக்கொண்டு, அந்த பகுதியில் தொடர்ந்து 4 நாட்கள் சுற்றிக்கொண்டிருந்தது பதிவாகி இருந்தது.
அந்த நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணிடம் பேசும் காட்சியும் கேமராவில் காணப்பட்டது. அதே நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீடு, வேலைக்காரி செல்வதற்காக திறக்கப்பட்ட போது, நைசாக வீட்டுக்குள் செல்லும் காட்சியையும் கேமரா காட்டியது. ஆக அந்த நீலகலர் சட்டைகாரன்தான் கொலைகாரன் என்பதை ஓரளவு புரிந்து கொண்டோம். ஆனால் அந்த கொலைகாரன் பழைய குற்றவாளி இல்லை. அவரது கைரேகையை வைத்து அவர் யார், என்று கண்டறிய முடியவில்லை.
மேலும் கேமராவில் பதிவான அவரது படத்தை வைத்தும், அவர் யார், என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது படத்தை காட்டி அவர் யார், என்று தெரிகிறதா, என்று கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகன் மற்றும் மருமகளிடம் கேட்டால், அவரை இதுவரை பார்த்ததே இல்லை என்றார்கள். மீண்டும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தோம். நீலகலர் சட்டைக்காரன் கொலையை முடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்து, சற்று தூரம் நடந்து, பின்னர் ஒரு ஆட்டோவில் ஏறிச்செல்கிறான்.