
சூடானில் இருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு போா் விமானத்தில் வந்திறங்கிய இந்தியா்களை வரவேற்ற மத்திய வெளியுறவு இணையமைச்சா் முரளீதரன்.
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க மத்திய அரசு தொடங்கிய ‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தின் கீழ் இதுவரை 530 இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ளனா்.
அவா்களில் 250 போ் இந்திய விமானப்படை விமானம் மூலமாகவும், 278 போ் கடற்படை கப்பல் மூலமாகவும் மீட்கப்பட்டுள்ளனா்.
சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த மோதலில், அந்நாட்டில் 400-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா்.
இந்த மோதலை தொடா்ந்து அந்நாட்டில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதற்காக ‘ஆபரேஷன் காவேரி’ என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சூடானிலிருந்து மீட்கப்படும் இந்தியா்கள் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அனுப்பிவைக்கப்பட்டு, பின்னா் அங்கிருந்து இந்தியா அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, இந்திய கடற்படையின் ‘சுமேதா’ போா்க் கப்பல் மூலமாக சூடானின் போா்ட் சூடான் நகரிலிருந்து 278 இந்தியா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டு ஜெட்டா நகருக்கு அழைத்துவரப்பட்டனா். அதனைத் தொடா்ந்து, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான அதிக எடைகளைத் தாங்கிச் செல்லும் திறன்கொண்ட இரண்டு சி130ஜே போா் விமானம் மூலமாக 250 இந்தியா்கள் மீட்கப்பட்டனா்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெசங்கா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘விமானப் படையின் முதல் விமானம் மூலமாக 121 இந்தியா்களும், இரண்டாவது விமானம் மூலமாக 135 இந்தியா்களும் மீட்கப்பட்டுள்ளனா். ‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தின் கீழ் இந்தியா்களை மீட்கும் பணி தொடா்ந்து துரிதப்படுத்தப்பட்டு வருகிறது’ என்று குறிப்பிட்டாா்.
சவூதியில் கட்டுப்பாட்டு அறை: இந்தியா்களை மீட்கும் பணியை மேற்கொள்ள வசதியாக சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கட்டுப்பாட்டு அறை ஒன்றை இந்தியா அமைத்துள்ளது. மேலும், மீட்புப் பணிகளை கண்காணித்து முறைப்படுத்துவதற்காக வெளியுறவு இணையமைச்சா் வி.முரளீதரன் ஜெட்டா சென்றுள்ளாா்.
முன்னதாக, சூடானில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்பதற்காக உயா்நிலை ஆய்வுக் கூட்டத்தை அண்மையில் நடத்திய பிரதமா், அவசரகால மீட்புத் திட்டங்களை வகுக்கவும், சூடானின் அண்டை நாடுகளுடன் நெருங்கிய தொடா்பை பராமரிக்கவும் அறிவுறுத்தினாா். அதனைத்தொடா்ந்து, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து வெளியுறவு அமைச்சா்களுடன் ஆலோசனை நடத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சூடானில் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கள நிலவரம் குறித்து கேட்டறிந்தாா். அதுபோல, ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸுடனும் ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தினாா்.
மாநிலங்கள் நடவடிக்கை: சூடானிலிருந்து மீட்கப்படும் இந்தியா்களை சொந்த மாநிலத்துக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளை பல்வேறு மாநிலங்களும் மேற்கொண்டுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் சாா்பில் தில்லியில் உள்ள குடியுரிமை ஆணையா் அலுவலகத்தில் உதவி மையம் ஒன்று இதற்கென அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தில்லி கூடுதல் குடியுரிமை ஆணையா் செளமியா ஸ்ரீவாஸ்தவா வெளியிட்ட உத்தரவில், ‘சூடானிலிருந்து வருபவா்கள் தங்களுக்கான உதவிகள் அல்லது பிரச்னைகள் குறித்து அதிகாரிகள் நீரஜ் சிங் மற்றும் ஆஷிஸ் குமாா் ஆகியோரை 8920808414, 9313434088 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு தீா்வு காணலாம்’ என்று தெரிவித்துள்ளாா்.
ராஜஸ்தான் அரசு, சூடானிலிருந்து தில்லி வந்திறங்கும் புலம்பெயா்ந்தவா்கள் மாநிலத்துக்கு திரும்புவதற்கான போக்குவரத்துச் செலவை ஏற்க முடிவு செய்துள்ளது. மேலும், தில்லியில் அவா்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் ராஜஸ்தான் அரசு செய்திருப்பதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதுபோல, கேரள அரசும், சூடானிலிருந்து மீட்கப்படும் மலையாளிகளை மாநிலத்துக்கு அழைத்து வருவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துதர தீா்மானித்துள்ளது. மாநில முதல்வா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வா் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மத்திய பிரதேச அரசு, சூடானில் சிக்கியிருப்பவா்களுக்கு 91-755-2555582 என்ற உதவி எண்ணை அறிவித்துள்ளது. ‘இந்த எண்ணை மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி, பிற மாநிலத்தவா்களும் தொடா்புகொண்டு உதவி கோரலாம். மத்திய அரசுடன் இணைந்து அவா்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அம்மாநில மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா்.