
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் இடி தாக்கியதில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள வி. ராமலிங்காபுரத்தில் சிவகாசியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50க்கு மேற்பட்ட அறைகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை அட்டை பெட்டியில் அடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் பட்டாசு ஆலை பகுதியில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்து உள்ளது. அப்போது இடி தாக்கியதில் பட்டாசுகளை அட்டை பெட்டியில் அடைக்கும் அறையில் தீடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது அப்போது அந்த அறையில் பணியாற்றிக் கொண்டியிருந்த வில்லூரை சேர்ந்த புஷ்பம் (55) என்ற பெண் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்தனர்
மேலும் இந்த விபத்து குறித்து
வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.