
நடிகர் அஜித் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் நேற்று முதலே அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். #HappyBirthdayAK என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அஜித் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12.00 மணிக்கு லைகா நிறுவனம் AK 62 படத்தின் தலைப்பை அறிவித்தது. ‘விடாமுயற்சி’ என்று தலைப்பிடப்பட்ட அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். அஜித் தனது சர்வதேச பைக் டூரை நிறைவு செய்த பிறகு இப்படத்தின் பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே கடந்த ஆண்டு அஜித்தின் 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கதையில் திருப்தி இல்லாததால் இப்படம் சிறிது நாட்களிலேயே கைவிடப்பட்டது. இது குறித்த தனது வருத்தத்தை விக்னேஷ் சிவன் பல்வேறு பேட்டிகளில் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், அஜித்தின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார். உங்கள் மகிழ்ச்சிதான் எங்களுக்கு எல்லாமே. நிபந்தனையற்ற அன்பே என்றும் நிரந்தரம். விடாமுயற்சி படத்துக்கு என்னுடைய வாழ்த்துகள்’ என்று ட்வீட் செய்துள்ளார். இத்துடன் ‘என்னை அறிந்தால்’ படப்பிடிப்பின் போது அஜித்துடன் தான் இருக்கும் இரண்டு புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
திரைப்பயணத்தின் தொடக்கம் முதலே அஜித் பல தோல்விகளைக் கண்டவர். திரையுலக பின்புலம் எதுவும் இல்லாமல் தனக்கான இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டவர். தனது புகழை அதிகப்படுத்திக் கொள்ளும் பொருட்டு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வருபவர்.
இவையெல்லாம் அவசியமென்ற பல சினிமா பாஃர்மேட்டுக்குள் அடைக்கமுடியாதவர். ஆனாலும் அவரது படங்களின் ஓபனிங் வசூல் இன்றளவும் குறையவே இல்லை. அஜித்தின் இந்த வலிமையும் துணிவும்தான், தலைமுடியும் அதன் நிறமும் தன் வளர்ச்சியை ஒருபோதும் தடுக்காது என்று வீரத்துடன் அவரை பயணிக்க வைக்கிறது.