
கர்நாடகத்தில் தேர்தல்களத்தில் போட்டியிடும் 1,087 வேட்பாளர்கள் கோடீசுவரர்களாக உள்ளனர்.
பெங்களூரு கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 2,615 வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களுடன், பிரமாண பத்திரத்தை வைத்து டெல்லியை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டனர்.
அதாவது பணக்காரர்களில் எந்த வேட்பாளர்கள் முதலிடத்தில் உள்ளனர். எந்த கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கோடீசுவராக உள்ளனர் என்று அறிக்கை தயார் செய்துள்ளது. அதன்படி, கர்நாடகத்தில் தேர்தல்களத்தில் 2,615 வேட்பாளர்கள் இருந்தாலும், 2,586 வேட்பாளர்கள் பற்றிய சொத்து விவரங்களை சேகரித்து, அவர்கள் குறித்த தகவல்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 1,087 வேட்பாளர்கள் கோடீசுவரர்கள் ஆவார்கள். 14 வேட்பாளர்களிடம் எந்த சொத்துகளும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 2,560 வேட்பாளர்களில் 651 பேர் கோடீசுவரர்களாக இருந்தனர்.
இந்த தேர்தலில் 7 சதவீத கோடீசுவர வேட்பாளர்கள் அதிகரித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. ரூ.5 கோடி மற்றும் அதற்கு மேல் 592 வேட்பாளர்கள் (23 சதவீதம்), ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை 272 வேட்பாளர்கள் (11 சதவீதம்) உள்ளனர். மேலும் ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடி வரை 493 வேட்பாளர்கள் (19 சதவீதம்), ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை 578 வேட்பாளர்கள் (22 சதவீதம்), ரூ.10 லட்சத்திற்கும் குறைவான சொத்துகளுடன் 651 வேட்பாளர்கள் (25 சதவீதம்) இருப்பதாக அந்த அமைப்பு பிரமாண பத்திரத்தில் அடிப்படையில் கணக்கிட்டு தெரிவித்துள்ளது.
இவர்களில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் 224 வேட்பாளர்களில் 216 பேரும் (96 சதவீதம்), காங்கிரஸ் கட்சி சார்பில் 221 வேட்பாளர்களில் 215 பேர் (97 சதவீதம்), ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 208 வேட்பாளர்களில் 170 பேரும் (82 சதவீதம்), ஆம்ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் 208 வேட்பாளர்களில் 107 பேரும் (51 சதவீதம்) ரூ.1 கோடி மறறும் ரூ.1 கோடிக்கு மேல் சொத்துகளுடன் கோடீசுவரர்களாக இருக்கின்றனர்.
அதன்படி, முதல் 3 இடங்களில் சிக்பேட்டை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் கே.ஜி.எப். பாபுவுக்கு ரூ.1,633 கோடியும், பா.ஜனதா சார்பில் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் எம்.டி.பி.நாகராஜிடம் ரூ.1,609 கோடியும், ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் போட்டியிடும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரிடம் ரூ.1,413 கோடியும் உள்ளது. 14 வேட்பாளர்களுக்கு எந்த சொத்து இல்லை என்று தெரியவந்துள்ளது.